மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறப்பு!!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
தலவாக்கலை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு இரு மருங்கிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக மாலை வேளையில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை காரணமாக காசல்ரீ, கனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. எனவே மலைகளுக்கும் மண்மேடுகளுக்கும் அருகாமையில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் மண்சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மலையக நகரங்களின் தீபாவளி வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.