மகாராஷ்டிராவில் 1½ ஆண்டுக்கு பிறகு வீழ்ச்சியடைந்த கொரோனா…!!
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலத்தில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 10 கோடியை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் தொற்று பாதிப்பும் கட்டுக்குள் உள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் நோய் பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைந்தது.
மாநிலத்தில் புதிதாக 809 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு மே 2-ந் தேதி 790 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். சுமார் 1½ ஆண்டுக்கு பிறகு தற்போது பாதிப்பு குறைந்து உள்ளது.
இதேபோல மாநிலத்தில் 10 பேர் மட்டும் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். 1,901 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் இதுவரை 66 லட்சத்து 11 ஆயிரத்து 887 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64 லட்சத்து 52 ஆயிரத்து 486 பேர் குணமடைந்தனர். 1 லட்சத்து 40 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்து 552 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தில் 15 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகராட்சிகளில் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 452 பேர் வீடுகளிலும், 953 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 97.59 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். இறப்பு விகிதம் 2.12 ஆக உள்ளது.
தலைநகர் மும்பையில் புதிதாக 267 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 56 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,595 நாட்களாக உள்ளது. 33 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.