கேரளாவில் கார் விபத்தில் பலியான மாடல் அழகியின் தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி…!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கபீர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரசீனா.
இந்த தம்பதியின் மகள் அன்சி கபீர் (வயது 25). இவரின் தோழி திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா சாஜன் (26). ஆயுர்வேத டாக்டர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படிக்கும்போதே ஒன்றாக மாடலிங் செய்து வந்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் கொச்சியில் நடந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மிஸ் கேரளா பட்டத்தை அன்சி கபீர் வென்றார். அந்த போட்டியில் அஞ்சனா சாஜன் 2-வது இடம் பிடித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றனர். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே புகுந்தது. மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இதில் காரில் இருந்த அன்சி கபீர் மற்றும் அஞ்ஜனா சாஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் பயணம் செய்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்சி கபீர் விபத்தில் பலியானது பற்றி அவரது தாயார் ரசீனாவுக்கு அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதை கேட்டதும் ரசீனா, அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ரசீனா வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான மாடல் அழகி அன்சி கபீர் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி தகவல் பதிவிட்டுள்ளார். மேலும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.