பரமக்குடி அருகே நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர்…!!
ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவருடைய மனைவி பூங்கோதை (40). இவர்களது மகள் அபிநயா (20). இவர் தனது கணவருடன் பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பூங்கோதை அவரது மகள் வீட்டிலேயே கடந்த 6 மாதகாலமாக இருந்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்தும் வந்துள்ளார். இந்த நிலையில் அவரை கணவர் முருகானந்தம் சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வரமறுத்துள்ளார். இதனால் முருகானந்தத்துக்கு அவரது மனைவி நடத்தையில் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூங்கோதை உணவகத்தில் வேலை முடிந்து நேற்று மாலை 6 மணிக்கு சோமநாதபுரத்தில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு செல்ல நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்து நின்றிருந்த முருகானந்தம், திடீரென மனைவி பூங்கோதையை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் பூங்கோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கோதை உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முருகானந்தத்தை எமனேசுவரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.