வடமாகாணத்தில் கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் இறப்புக்களும் வெகுவாக குறைந்து வருகின்றது!!
வடமாகாணத்தில் புதிதாக இனங்காணப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் இறப்புக்களும் வெகுவாக குறைந்து வருகின்றது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடமாகாணத்தில் கோவிட்-19 தொற்று ஏற்பட்ட ஆரம்பகாலம் முதல் இன்றுவரை 38,850 நோயாளர்கள் கோவிட் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஆகக் கூடிய தொற்றாளர்கள் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14,135 பேர் இனங்காணப்பட்டனர்.
பின்னர் செப்ரெம்பர் மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,527ஆகக் குறைவடைந்து இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,612ஆக வெகுவாக குறைவடைந்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 நோயாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 703 நோயாளர்களும், கிளிநெர்சி மாவட்டத்தில் 654 நோயாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 273 நோயாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் இதுவரை கோவிட் தொற்றினால் 833 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 231 இறப்புக்களும் செப்ரெம்பர் மாதத்தில் ஆகக் கூடிய இறப்புக்களாக 350 இறப்புக்களும் பதிவுசெய்யப்பட்டன.
இதன்பின் ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து 71 இறப்புக்கள் மட்டும் பதிவுசெய்யப்பட்டன.
இதில் 44 இறப்புக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தும், 14 இறப்புக்கள் வவுனியா மாவட்டத்தில் இருந்தும் 09 இறப்புக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தும், 04 இறப்புக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தும் பதிவு செய்யப்பட்டன.
கோவிட் தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்து ஏற்றல் திட்டம் வடமாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 978 பேருக்கு 1வது தடுப்பூசியும் (89 சதவீதம்), 4 லட்சத்து 91 ஆயிரத்து 509 பேருக்கு 2வது தடுப்பூசியும் (76 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் 20 – 29 வரையான வயதினருக்கு 118,965 பேருக்கு 1வது தடுப்பூசியும் (62 சதவீதம்), 47,961 பேருக்கு 2வது தடுப்பூசியும் (25 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களில் 16 – 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி இதுவரை 46,981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் முதல் 2 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு 3வது அலகு பூஸ்டர் தடுப்பூூசி வழங்கும் பணிகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வடமாகாணத்தில் இத்தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
2வது தடுப்பூசி பெற்றுக்கொண்டதிலிருந்து 6 மாதத்தின் பின்னர் 3வது தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”