’இருளில் மூழ்கினால் அரசாங்கமே பொறுப்பு’ !!
நாடு இருளில் மூழ்குவதைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, திரவ எரிவாயு விநியோகம் மற்றும் கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை இன்று (03) வலியுறுத்தியது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடு மின் தடையை எதிர்கொள்ளும் பட்சத்தில், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரச வளங்களை கையளிக்கும் இரகசிய உடன்படிக்கைகளின் விளைவாக தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக தொழிற்சங்க நடவடிக்கையை நாடவில்லை என்றும் மாறாக தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய அவர், மிக முக்கியமான தேசிய சொத்தாக விளங்கும் எரிசக்தித் துறையை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.