உ.பி.யில் நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: சிறுமிகள் உள்பட நான்கு பேர் உயிரிழப்பு…!!!
உத்தர பிரதேச மாநிலம் பதோஹி, கோபிகஞ்ச் என்ற இடத்தில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் வசித்து வந்தனர். இதில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அஸ்லாம் அலி (75), அவரது மனைவி ஷகீலா பேகம் (70), இவர்களது பேத்திகள் தஸ்கியா (12), அல்விரா (10) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை காலை இவர்கள் தூங்கிய வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடித்ததை அறிந்து பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் காப்பாற்ற ஓடி வந்தனர். அதற்குள் தீ வேகமாக பரவி விட்டது. இதனால் அவர்களால் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் குறுகலான தெருவில் இருந்ததால், தீயணைப்பு வாகனத்தால் விரைவாக சம்பவ இடத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்தே கதவை உடைத்து உள்ளே செல்ல முடிந்தது. அதற்குள் மூன்றுபேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
அல்விரா மட்டும் உயிருக்கு போராடி நிலையில் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்து வருகின்றனர்.