;
Athirady Tamil News

வராக நதியில் குளிக்க சென்றபோது சோகம்: வெள்ளத்தில் சிக்கி மதுரை மாணவர் பலி…!!

0

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் வேதபாட சாலை குருகுலம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி வேதம் படித்து வருகின்றனர். நேற்று மதுரை பைபாஸ் ரோடு சுப்பிரமணிய சிவா தெருவைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சுந்தரநாராயணன் (வயது 19), சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் மணிகண்டன் (21) உள்பட 5 பேர் வராக நதியில் குளிக்கச் சென்றனர்.

இப்பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் அதனை அறியாமல் சுந்தர நாராயணன், மணிகண்டன், அஸ்வின் குமார், அய்யப்பன், தர்ம முனீஸ்வரன் அகியோர் அங்கு சென்றனர். அஸ்வின்குமாரை தவிர மற்ற 4 பேரும் தண்ணீரில் கால் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி உள்ளே விழுந்தனர்.

இதில் அய்யப்பன் மற்றும் தர்மமுனீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கரையில் இருந்தவர்கள் காப்பாற்றினர். சுந்தர நாராயணன், மணிகண்டன் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மேல்மங்கலம் தடுப்பணை, ஜெயமங்கலம் வராகநதி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு வரை தேடினர். அவர்கள் விபரம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை 2-வது நாளாக தேடும் பணியை தொடங்கினர். அப்போது சுழலில் சிக்கி கரையோரம் ஒதுங்கிய சுந்தரநாராயணன் உடலை மீட்டனர். அதனை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு மாணவரான சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையில் ஜெயமங்கலம் போலீசார் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குருகுலத்தில் உள்ள மற்ற மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.