நிலையான வேளாண்மை செயல் திட்டம்- பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து…!!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையான வேளாண்மை குறித்த செயல்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாததாகவும் மாற்றுவதற்கான புதிய உறுதிமொழிகளை வகுப்பதற்கான இந்த செயல்திட்டத்தில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உகாண்டா, வியட்நாம், ஜெர்மனி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகள் கையெழுத்திட உள்ளன.
நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான வேளாண் கொள்கை மற்றும் வேளாண்மையில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.
இந்த செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் கொள்கைகளை மிகவும் நிலையானதாகவும், மிக குறைவாக மாசுபடுத்துவதாகவும் மாற்றுவதற்கு புதிய உறுதிமொழிகளை வகுத்துள்ளன. நிலையான வேளாண்மைக்குத் தேவையான அறிவியலில் முதலீடு செய்வதற்கும், பருவநிலை மாற்றத்தில் இருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிமொழிகளை வகுத்துள்ளன.