தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! (படங்கள்)
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்பிட்டியில், 7 பரப்பு காணியும், ஜே/11 பிரிவு – மண்கும்பானில், 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு – வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளும், கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக குறித்த காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், இன்று காலை 9.30 மணியளவில், அவ்விடத்துக்கு வருகை தந்தனர்.
இதன் போது, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர், திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி, எதிர்ப்பு தெரிவித்ததால், காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”