இளைய தலைமுறையினர் இன்று தடுமாற்றங்களை சந்திக்கின்றனர் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா!!
இன்று இளைய தலைமுறை தடுமாற்றங்களை சந்திக்கின்றது என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய “இந்து சமய ஆன்மீக வாழ்வியல்” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழகப் பதில் நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இளைய தலைமுறை தடுமாற்றங்களை சந்திக்கின்றது. இது உலக இயல்பான விடயம். ஆனால் தடுமாற்றத்தில் இருந்து அவர்கள் மீள்வதற்கு சரியான திசைகாட்டிகள் அவசியம்.
அந்த திசைகாட்டிகளாக ஆன்மீகப் பெரியோர்கள், ஞானிகள், முனிவர்கள், சமய அறிஞர்கள் காலத்துக்குக் காலம் தோன்றி வழிகாட்டியுள்ளனர்.
அவர்கள் காட்டிய வழியில் பயணிக்கும்போது ஆன்மீக வாழ்வு வாழ்தலும், அதன் பயன்களை அனுபவித்தலும் எல்லோருக்கும் எளிதானது. இவ்வாறு வழிகாட்டிய பெருமகன்களை அறிமுகம் செய்து வைத்தல் அவசியம்.
அத்தகைய ஒரு முயற்சியாகவே இராமகிருஸ்ண பரம்ம ஹம்சர் குறித்து பத்மநாதன் ஆய்வு செய்து நமக்கு ஒரு நூலாக தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.
நிகழ்வில் ஆசியுரையை இந்துக் கற்கைகள் பீடத்தின் பதில் பீடாதிபதியும் சைவ சிந்தாந்தத் துறையின் துறைத் தலைவருமாகிய கலாநிதி விக்னேஸ்வரி பவநேசனும் வாழ்த்துரையை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபனும் நிகழ்த்தியிருந்தனர்.
நூல் மதிப்பீட்டுரையை சைவசித்தாந்தத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.பொ.சந்திரசேகர் நிகழ்தியிருந்தார். சைவ சித்தாந்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் இடையிலான எல்லைகளில் நின்று குறித்த நூல் மீதான மதிப்பீட்டுரையை நிகழ்த்தியிருந்தார்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் தான் இந்த நூலை உருவாக்குவதற்கான பிரதான உந்துசத்தியாகவிருந்தது நூலக சேவையில் நீண்ட காலம் ஈடுபட்டபோது நூல்களுடன் ஏற்பட்ட பரீட்சயமே என்பதுடன் பாடசாலைக் காலம் தொட்டு பல்கலைக்கழக சேவை வரை பல ஆசிரியர்களினதும் அறிஞர்களினதும் கல்விமான்களினதும் வழிகாட்டுதலே எனக் குறிப்பிட்டார்.
குறித்த நூல் நூலாசிரியர் இந்து நாகரீகத்தில் முதுதத்துவமாணிக் கற்கையை வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ண ஐயர் அவர்களுக்கு கீழ் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”