பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் பிரதான 9 கங்கைகளை அண்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தெதுறு ஓயா, அத்தனகல்ல ஓயா, கலா ஓயா, மஹா ஓயா, களனிகங்கை, களுகங்கை, ஜின்கங்கை, நில்வளா கங்கை, பெந்தற கங்கை ஆகிய ஆறுகளை அண்டியதாக வெள்ளம் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டியுள்ள அத்தனகல்ல, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய தாழ்நிலப் பிரதேசங்களில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படலாம்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து குக்குலே கங்கை ஆற்றிலும் குடா கங்கையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் களுகங்கையை அண்டியுள்ள புளத்சிங்கள, பதுரெலிய, பாலிந்தநுவர, மில்லெனிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய தாழ்நிலங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்களில் வகிக்கும் மக்களும் அங்குள்ள பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர். ஜின்கங்கையின் பத்தேகம பகுதி பெருக்கெடுத்துள்ளது. இது சிறிய அளவிலான வெள்ளமாக விருத்தியடைந்துள்ளது. நாகொட, வெலிவிற்றிய, திவிதுற, பத்தேகம போன்ற பிரதேசங்களில் பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. பெந்தற மற்றும் மாதுலுகங்கைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.
8 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 500 ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்துவரும் மழையைத் தொடர்ந்து அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய அளவிலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இராஜாங்கனை, அங்கமுவ மற்றும் துருவில நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளன. நுவரெலியா, ஹட்டன் பிரதான பாதையில் நுவரெலியா பிளக்பூல்ட் பிரதேசத்தின் ஊடாகச் செல்லும் பாதையின் மீது மாலை பெரிய மண்திட்டு இடிந்து வீழ்ந்ததால் அந்தப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் வாகனம் செலுத்தும் போது அவதானமாகச் செயற்படுமாறு பொலிசார் சாரதிகளைக் கேட்டுள்ளனர்.
அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். 9 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 63 பேர் தங்கியுள்ளனர். 249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 12 முழுமையான சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளன. 635 சொத்துக்களுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.