ம.பி.யில் சோகம் – போபால் மருத்துவமனை குழந்தைகள் வார்டு தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பலி..!!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து அறிந்த மாநில மருத்துவக் கல்வி மந்திரி விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கிடையே, போபால் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், போபால் கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 3 குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை தீவிபத்தில் சிக்கி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைக்கு நேரில் சென்ற மருத்துவ கல்வி மந்திரி விஸ்வாஸ் சாரங் கூறுகையில், குழந்தைகள் வார்டில் 40 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.