பண மதிப்பிழப்பால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? – பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி…!!!
பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். மக்களுக்கு கடும் சிரமத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்துள்ளன. துக்ளக் பிரதமர் கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறியதில் எதுவும் நடக்கவில்லை.
பணப்புழக்கம் அதிகரித்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது, பயங்கரவாத செயல்களுக்குப் பணம் செல்கிறது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழல் நிலவுகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, எது நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து நாட்டிற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.