வெள்ளத்தில் சென்னை: 6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- ஐகோர்ட் கேள்வி…!!
சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை அகலப்படுத்துவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் சென்னை மீண்டும் தத்தளிப்பது ஏன் என்று தலைமை நீதிபதி சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தை பாடமாகக் கொண்டு வரும் எதிர்கால பருவமழையை சமாளிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்கியது ஏன்? 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? பெருவெள்ளத்திற்கு பிறகு 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடரப்படும் என்றும் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி தெரிவித்துள்ளார்.