கூடுதலாக 126 மதுக்கடைகள் திறக்க ஐகோர்ட்டில் அரசு மனு – 2 வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது…!!
கேரளாவில் பெவ்கோ நிறுவனம் மூலம் அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 306 மது கடைகள் உள்ளன.
இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பெவ்கோ நிறுவனம் கோரியிருந்தது. இதற்கிடையே மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளின் குறைபாடுகள் தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாநிலத்தில் கூடுதலாக 126 மதுகடைகள் திறக்க வேண்டும் என்ற பெவ்கோவின் கோரிக்கை, அரசின் கலால் துறை பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், மதுக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தெரிவித்தனர். மேலும் மதுக்கடைகளில் காத்திருக்காமல் மதுவாங்கி செல்வது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுவது பற்றியும் அரசு பரிசீலித்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அரசு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பான விசாரணை 2 வாரத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.