கேரளாவில் சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ….!!
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மாநில அரசு அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபைக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து காலையில் நண்பர் ஒருவரின் சைக்கிளை வாங்கிய அவர் பின்னர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு புறப்பட்டார். சட்டசபைக்கு சைக்கிளில் வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
பின்னர் அங்கு இருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் மீண்டும் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். எம்.எல்.ஏ.சைக்கிளில் வந்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இது தொடர்பாக வின்சென்ட் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராடுகிறது. எனவே போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் சைக்கிளில் சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.