18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – மன்சுக் மாண்டவியா…!!
இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகள், மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்ட், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.
தற்போது வரை 79 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 38 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.