திருமண விருந்துக்கு சென்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…!!
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடாதவர்களை இல்லம் தேடி சென்று கண்டறிந்து தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நர்சுகள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் நர்சுகள் ஒரு படி மேலே சென்று திருமண விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தினர்.
அதாவது, ஆரல்வாய்மொழி, தாணுமாலயன்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கான மறுவீடு காணும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அமர்ந்து விருந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிராம சுகாதார நர்சுகள் தடுப்பூசி மருந்துடன் வந்து தடுப்பூசி போடாதவர்கள் யாரேனும் உண்டா? என்று கேட்டனர். விருந்தில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் செல்போன் எண் மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தங்கள் இருப்பிடம் தேடி தடுப்பூசி வந்ததே என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் வெளியூரில் இருந்து வந்தவர் ஒரு சிலரும் அடங்குவர். திருமண விருந்து நடக்கும் இடத்தில் சென்று தடுப்பூசி போட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.