கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு…!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்ற இடத்தில் இவருக்கும், சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சுவேதாவை பெங்களூருவில் இருந்து கல்லந்தல் பகுதிக்கு அழைத்து வந்து அவருடன் சுபாஷ் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 9.1.2020 அன்று இரவு 10 மணிக்கு சுபாசும், சுவேதாவும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுவேதாவை தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சுபாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.