பசுக்களால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் -சிவராஜ் சிங் சவுகான் பேச்சு…!!
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
பசுக்கள், மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே, அவை மிகவும் முக்கியமானவை. முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை, மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்.
இந்த துறையில் பெண்களின் பங்களிப்புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்களை தயாரிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில், பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கும், பசு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் ஆறு துறைகளின் அமைச்சர்களைக் கொண்ட பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.