மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஜனாதிபதி, பிரதமர் கடும் கண்டனம்…!!
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே அசாம் ரைபிள் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அசாம் ரைபிள் படையின் கட்டளை அதிகாரி விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அனைத்து வடிவங்களிலும் வெளிப்படக்கூடிய பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.