மாநில அந்தஸ்து கேட்டு டிசம்பர் 6ல் ஸ்டிரைக்- லடாக் தலைவர்கள் அறிவிப்பு…!!
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும், மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். லடாக்கில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளூர் இளைஞர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்த வேண்டும், லடாக்கிற்கு மேலும் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கத்தின் லே நகர உயர் அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) கூட்டாக இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மார்ச் மாதம் லே மற்றும் கார்கில் ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இந்த இரண்டு அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இதில், ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்க உயர் அமைப்பில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர், அந்த அமைப்பு முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை எழுப்பியதால் பாஜக ஒதுங்கியது.
கேடிஏ மற்றும் ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கத்தின் உயர் அமைப்புக்கு வெளியே உள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. அந்த கட்சியின் உள்ளூர் தலைமை, கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் கூட்டுக் கூட்டணியின் அங்கமாக மாறும் என கேடிஏ தலைவர் கர்பாலாய் நம்பிக்கை தெரிவித்தார்.