வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!!
முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் நாளை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு – காங்கேசன்துறை இடையே நாளை திங்கட்கிழமை மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த ரயில் பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பணி நிறைவடையும் வரை, முதன்மை பாதையிலான தொடருந்து சேவைகள், கொழும்பு கோட்டையிலிருந்து வியாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்கள பொறியியலாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”