பழைய வர்த்தமானி அறிவித்தல் இரத்து…!!
மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார்.
முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது குற்றங்களை புரிந்துள்ளார் என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருப்பதாக என தெரிவித்து தவிசாளர் மற்றும் சபை அங்கத்துவர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முஜாஹிர் தனது பதவிகளை ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது கடந்த 09.03.2018 அன்று இடம்பெற்றது.
இத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பிரதேச சபைக்கான ஆட்சியை தன்வசம் கைப்பற்றியிருந்தது. இதற்கமைய இப் பிரதேச சபைக்கான தவிசாளராக இக் கட்சியைச் சார்ந்த சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் புதுக்குடியிருப்பு வட்டாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பிப்தற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (2) ஆம் உப பிரிவுகளுக்கமைய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரனை குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்திற் கொண்டதன் பின்பே இவர் தனது மன்னார் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வட மாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து எஸ்.எச்.எம். முஜாஹினால் கொழும்பு மேல் நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு புதன் கிழமை 29.09.2021 நடைபெற்றது.
அப்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியிருந்தது. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராக அப்பொழுது தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (3) (ஆ) ஆம் பிரிவின்படி விடயப் பொறுப்பு அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டு 2018.10.24 ஆம் திகதி முதலாவது வட மாகாண சபை காலாவதியானதன் பேரில் இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 2 ஆம் பிரிவினூடாக எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வட மாகாண ஆளுநராகிய ஜீவன் தியாகராஜா ஆகிய நான் ஓய்வுபெற்ற நீதி அலுவலர் திரு கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரனைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர் அவர்களை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதிவியிலிருந்து தீர்மானித்து வெளியிடப்பட்ட 2021.09.13 ஆந் திகதிய வர்த்தமான அறிவித்தலை இரத்து செய்கின்றேன் என வட மாகாணம் ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2021.11.10 ந் திகதி புதன்கிழமை வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் தனது பதவியை மீண்டும் திங்கள் கிழமை (15.11.2021) பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.