ஈகுவடார் சிறை கலவரம் – பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு…!!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அங்கு அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது பல்வேறு பிரச்சினைக்கு வித்திடுகிறது.
குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது. எனவே ஈகுவடார் சிறைகளில் அடிக்கடி கலவரம், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன.
இதற்கிடையே, ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறையில் சமீபத்தில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 52 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சிறை கலவரத்தில் பலியான கைதிகள் எண்ணிக்கை 68 ஆக ஆதிகரித்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.