பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவிக்கும் அரச உயரதிகாரிகள்!!
மனிதாபிமானமற்ற முறையில் குடியிருக்கும் பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவிக்கும் அரச உயரதிகாரிகள் ,மக்கள் பிரதிநிதிகளை தடுத்து நிறுத்தகோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு மக்கள் கடிதம் எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் குடியிருக்கும் பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவித்தமையினால் பாதிப்படைந்த வீதியைப் புனரமைத்து தருமாறு ஐனாதிபதி மற்றும் வடமாகாண ஆளுநருக்கு சங்கானை பகுதி மக்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நாம் குடியிருக்கும் வீதியில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம் . அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பாக சங்கானை 7 ம் கட்டை , பாரதி வீதியிலுள்ள குடிமனையில் உள்ள வெள்ள நீரை கால்வாய்கள் மூலம் வெளியேற்றாமல் வலிகாமம் மேற்கு பிரதேசபைத் தவிசாளர் , வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் ஆகியோரின் நடவடிக்கையால் வெள்ள நீர் வெட்டப்பட்டு சுமார் 150 மீற்றர் தற்காலிக வாய்க்கால் அமைத்து பாரதி வீதிக்கு அடுத்ததாக உள்ள வலி தென்மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குள் அமைந்துள்ள வலி தென்மேற்கு பிரதேசசபையில் பதிவு செய்யப்பட்ட காரைநகர் மானிப்பாய் முதலாம் வீதிக்குள் வெள்ளநீர் திருப்பப்பட்ட நிலையில் அவ்வீதி முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
இந்த செயற்பாடானது தொழிநுட்ப ஆலோசனை பெறப்படாமையினால் வீதிக்குள் விடப்பட்ட வெள்ள நீர் வீதிக்குள் உள்ள வதிவிடங்களுக்கு ஊடாக குருதிச்சுற்றோட்டம் போன்று மீண்டும் 7 ம் கட்டை பாரதி வீதிக்குச் சென்று மீண்டும் எமது வீதி ஊடாக வெள்ள நீர் செல்லும் இடம் தெரியாமல் சுற்றித்திரிகிறது .
குறித்த விடயம் தொடர்பாக சங்கானை பிரதேச செயலாளர் வலி மேற்கு தவிசாளர் மற்றும் சங்கானையில் உள்ள பொது அமைப்பிடம் குறித்த விடயங்கள் தொடர்பில் கேட்ட போது இந்த செயற்பாட்டிற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவிக்கின்றனர். ஆனால் தாமே அதனை செய்தோம் என தமக்கு ஆதரவான முகப்புத்தகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இவர்களது இந்த செயற்பாட்டால் இரு பிரதேசங்களின் எல்லையில் பிரச்சினையை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதாக எண்ணத் தோன்றுகின்றது.
வெள்ளநீரை வெளியேற்றுகிறோமென செயற்படுபவர்கள் குறித்த நீர் எங்கு செல்கின்றது என்பதை ஆய்வு செய்யாமல் தமது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள். இத்தகைய பிரச்சினையை தூரிதமாக தீர்த்துவைக்கவேண்டும்.பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்சியாக நோய் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”