யாழ் மாநகர மேயர் தனது கட்சி கட்டமைப்பை விஸ்தரித்தல் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்!!
யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிக்கும் பொருட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்களுடன் வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வவுனியா நகரில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (14.11) காலையில் இருந்து மாலை வரை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்களை திரட்டி கட்சி கட்டமைப்பு ஒன்றை விஸ்தரிக்கும் முயற்சியில் யாழ் மாநகர மேயர் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் எதிர்காலத்தில் கட்சியை விஸ்தரிப்பது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், ஆளணியைத் திரட்டல் மற்றும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து கடந்த காலங்களில் செயற்பட்ட 20 பேர் வரையிலானோர் பங்குபற்றியிருந்தனர். மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்களுடனும் தனது கட்சியை விஸ்தரிப்பது தொடர்பில் அவர் தனித்தனியாக சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் யாழ் மாநக மேயருடன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசல்யா, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பி.யானுயன், இளங்கோ மாஸ்ரர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”