சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் சிறையில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர் விடுதலை…!!
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் ராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார்.
அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்தேதி மியான்மர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மியான்மரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து ராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியான்மர் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.