;
Athirady Tamil News

ஹாட்லியின் மைந்தர்களது 22ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு!! (படங்கள்)

0

ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 22 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (17/11) காலை 9.00 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17/11/1999 அன்று கடலோடு கடலாக சங்கமித்திருந்த, பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகியோருடன் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்த பொழுதில் 17/05/2004 அன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி சாவடைந்திருந்த மரியரட்ணம்-குணரட்ணம் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் படையலிட்டு மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர்தூவி, சுடரேற்றி நினைவு வணக்கம் செலுத்தியிருந்தார்கள். இறுதியில் படையல் பொருட்கள் மற்றும் மாலை, பூக்கள் என்பன மாணவர்களின் ஆன்மா இரண்டறக் கலந்திருக்கும் இன்பர்சிட்டி கடலில் கலக்கப்பட்டது.

இதேவேளை இம்மாணவர்களது நினைவாக குருதிக்கொடை முகாம் ஹாட்லி கல்லூரியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.