உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!
அருட்தந்தை சிறில் காமினியை சிஐடி விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார்.
அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். பிரதான சூத்திரதாரி யார் என்று தெரிந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றே கோருகிறோம்.
நானும் கத்தேரிக்க மதத்தவர். நீங்களும் கத்தோலிக்க மதத்தவர். அவரை விசாரிப்பதில் தவறுள்ளதா. ஞானசார தேரர் பற்றி நான் பேசவில்லை. நான் கத்தோலிக்க மதத்தவர். யாருக்காவது தகவல் தெரிந்தால் கூற வேண்டும். மதத்தலைவர்களை தேவையின்றி விசாரிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. மக்களை சாகவிட்டு உறங்கியவர் தான் ஹரீன் பெர்ணான்டோ. இந்த தாக்குதல் பற்றி யாருக்காவது தெரிந்திருந்தார் வெளியிட வேண்டும். அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ யாருக்கும் தகவல் தெரிந்திருந்தால் கூற வேண்டும். மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கூட அவமதித்தவர்கள் உங்கள் தரப்பில் உள்ளனர். அவருக்காக நாம் தான் குரல் கொடுத்தோம். ஹரீன் பெர்ணான்டோ அவரை அவமதித்தார். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மத போதகரா வேறு ஒருவரா என்பது பிரச்சினையல்ல. யாருக்காவது தகவல் தெரிந்தால் அதனை வெளியிட வேண்டும்.
எமக்கு எவரையும் திரும்பத்திரும்ப விசாரிக்கத் தேவையில்லை. நீங்கள் தான் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள். இதனை இணைந்து தேடுவொம். அருட்தந்தையை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள்.
அவரும் வேறு சிலரும் புலனாய்வு பிரிவு தலைவருக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர். அதனால் தான் அவரை அழைத்து விசாரித்துள்ளனர். பிரதான சூத்திரதாரி யார் என தெரிந்தால் வௌியிட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றே கோருகிறோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவிக்கையில், ஜானசார தேரர், நிலந்த ஜயவர்தன, மைத்திரிபால சிறிசேன போன்றவர்களை ஏன் விசாரிக்க முடியாது. அருட்தந்தை சிரில் காமினியை நீண்ட நேரம் சி.ஐ.டி விசாரித்துள்ளது. அவரா குண்டைக்கட்டிக் கொண்டு பாய்ந்தார். அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
ஏன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது. ஏன் ஞானசார தேரரை விசாரிக்க முடியாது. அருட்தந்தை சிறில் காமினியை திரும்பத் திரும்ப விசாரிக்க வேண்டும். எமது அருட்தந்தை நியாயத்தை தான் கேட்டார். அத்தகைய ஒருவரை விசாரிப்பதை தான் எதிர்க்கிறோம் என்றார்.