துறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்!! (மருத்துவம்)
சில தினங்களுக்கு முன் தோழி ஒருவரின் அக்கா, தன் மகன் (4 வயது) எப்போது பார்த்தாலும் ஓரிடத்தில் உட்காராமல், எது சொன்னாலும் காதில் வாங்காமல் துறுதுறுவென்று அவன் போக்கில் நடந்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை வருத்தத்தோடும் பயத்தோடும் என்னிடம் பகிர்ந்தார். உடனே அவரிடம் வருத்தப்படத் தேவையில்லை என ஆறுதல் சொல்லி அவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் சொன்னேன். உண்மையில் இது ஏதோ அவரது குழந்தைக்கு மட்டுமான தனிப் பிரச்சனை கிடையாது. இன்றைக்கு எத்தனையோ இளம் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. அதனால் அனைத்து பெற்றோர்களும் அறியவேண்டிய அவசிய ஒன்று என்பதால் அதை இங்கே உங்களிடம் பகிர்கிறேன்.
Attention Deficient Hyperactive Disorder என்னும் ஏடிஎச்டி என்பது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு எனலாம். இது அவதானக் குறைவு மற்றும் அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பெரும் நிலையைக் கொண்ட சிறுவயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த ஓர் உளவியல் குறைபாடாகும். சிறுவயதினர் மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்படும் என்றாலும் அதிகம் குழந்தைகளுக்குதான் வரக்கூடும். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில குழந்தைகள் சுற்றித் திரிந்து விளையாடும். சிலக் குழந்தைகளோ அம்மாவிடம் மட்டுமே பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். இன்னும் சில குழந்தைகளோ தன் வயதொத்த குழந்தைகளோடு மட்டுமே விளையாடும்.
இவர்களைத் தாண்டி சில குழந்தைகள் எப்போதும் கால்களில் சக்கரம் கட்டியது போல் ஓயாமல் ஓடியாடி திரிந்துகொண்டிருக்கும். அவர்களது கவனம் எதிலும் இல்லாமல், விடாமல் பேசிக்கொண்டும், துறுதுறுவென்றும் சுற்றித் திரிவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் ஏடிஎச்டி உள்ள குழந்தைகள் என்கிறோம்.
ஏடிஎச்டி என்பது..?
இதுவொரு நோய் அல்ல குறைபாடு மட்டுமே என்பதை முதலில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அடுத்தது, இதனை முழுவதும் தகுந்த சிகிச்சைகள் மூலம் சரி செய்யலாம் என்பதை அறிதல் அவசியம். இது ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் வரக்கூடும் என்றாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரக்கூடியது. அதாவது, 10 ஆண் குழந்தைகளுக்கு 1 பெண் குழந்தை வீதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இக்குறைபாடு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அதிகம் இருக்கிறது என்றாலும் வளரும் நாடுகளில் தான் மிக அதிகம். இதன் அறிகுறிகளை 3 – 4 வயதில் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், மற்றவர்களும் எளிதில் அதாவது வெளிப்படையாக கண்டறியலாம் என்றாலும் 1 1/2 வயதில் கூட சில குழந்தைகளிடம் இதன் அறிகுறிகளை சுலபமாக அடையாளம் காணலாம்.
ஒரு பள்ளியில், ஒரு வகுப்பிற்கு ஒரு குழந்தையேனும் ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது என்பது தற்போதைய நிலை. பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி 1 வயது முதல் 7 வயது வரை எந்த வயதிலும் வரக்கூடும். உலக அளவில் 30 குழந்தைகளுக்கு 1 குழந்தை ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக சொல்கிறது அண்மைய ஆய்வு முடிவுகள். இது கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் என்றாலும் நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது யாவரும் கவனத்தில் நிறுத்தவேண்டிய ஒன்று.
ஏடிஎச்டி-யின் வகைகள்..?
1. கவனம் மட்டும் இல்லாமல் இருப்பது (attention deficient disorder)
2. மிகையியக்க செயல்பாடு (hyper activity disorder)
3. இவை இரண்டின் கலவை (attention deficient hyperactive disorder).
குறிப்பு: பெரும்பாலான குழந்தைகளுக்கு இவை இரண்டும் இணைந்தே வரக்கூடும்.
இடமும் அறிகுறியும்..?
வீட்டில்
1.: ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள்.
2. ஒரு விளையாட்டுப் பொருளில் அல்லது ஒரு விளையாட்டில் அதிகபட்சம் 2 – 3 நிமிடங்கள் கூட கவனம், நேரம் செலுத்த மாட்டார்கள். ஆனால், அதுவே அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால் அதை விளையாடி முடிக்கும் வரை அவர்கள் கவனம் முழுதும் அதில் இருக்கும்.
3. தூக்கம் சிறிது நேரம் தான் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.
4. எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.
5. ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உணவு உண்ணும் போது, வீட்டு பாடம் படிக்கும் போது.
6. அவர்கள் அதீத ஆற்றலோடு இயங்குவதால், தினசரி வேலைகளான குளிக்க வைப்பது, சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளப்புவது என அனைத்தும் சிரமமான ஒன்று.
7. ஏதேனும் ஒரு வேலை கொடுத்து செய்யச் சொன்னால், அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, ஓர் அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் இருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னால், அதை புரிந்து அவர்கள் செய்வார்கள். எனினும் அதற்குள் எக்கச்சக்கமான கவனச்சிதறல்கள் இருக்கும். ஆகையால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைக்குப் பல நிமிடங்களை வீணடிப்பார்கள்.
பள்ளியில்
1. Play school, Montessori போன்றவை விளையாட்டு முறை கல்விதான் எனினும் இவர்கள் கவனமும், உட்கார்ந்து இருக்கும் நேரமும் குறைவுதான்.
2. Story time, snack time, colouring time போன்ற நேரங்களில் தன் இருக்கையில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து ஓடுவது, பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்கள் வேலையை செய்ய விடாமல் கவனம் சிதறச் செய்வது.
3. வரிசையில் நிற்கும்போது ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரிவது.
4. யாரிடமும் பேசாமல், உடன் சேர்ந்து விளையாடாமல், பாடம் நடத்தும்போது கவனிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
பொது இடங்களில்
1. பூங்கா போன்ற இடங்களில் முழுமையாக ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
2. நீண்ட காலி இடங்களைப் பார்த்தால் அங்கு ஓடிக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, பள்ளி வளாகம், தெருக்கள்.
3. Super market, சந்தை போன்ற இடங்களுக்குக் கூட்டி சென்றால் பெற்றோர்களுடன் இருக்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது.
4. சாலையில் வண்டிகள், ஆட்கள் வருவது தெரியாமல் சுற்றித் திரிவது.
5. புது இடங்களில், புது மனிதர்களின் வீட்டிற்கு சென்றால், அவர்களுடன் பேசாமல், அங்கு இருக்கும் பொருட்களை ஆராய்வது, கீழே தள்ளி விடுவது, அங்கு இருக்கும் பொருட்களை விளையாட வேண்டும் என்று அடம் பிடிப்பது, பொருளை தெரியாமல் உடைப்பது.
6. தனக்கான நேரம் வரும் வரை காத்திருக்காமல் இருப்பது. உதாரணமாக, பேசும்போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் தான் சொல்ல கேட்க விரும்புவதை மட்டுமே செய்வது.
7. நடந்து செல்லாமல் ஓடுவது, குதித்து குதித்து ஓடுவது.
8. இடைவிடாது சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பது.
தெரிய வேண்டியவை..?
1. குழந்தைகள் நம் கண்களை / முகத்தைப் பார்த்து பேச வேண்டும்.
2. அவர்கள் குறைந்தது 5 முதல் 7 நிமிடமாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
3. குறைந்தது 7 முதல் 10 நிமிடங்களாவது ஓரிடத்தில் நிற்கவோ, அமரவோ வேண்டும்.
4. விளையாடும் போதும், பேசும் போதும் தனக்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
ஏடிஎச்டி வருவதற்கு சரியான காரணங்கள் இன்னும் கண்டறியவில்லை எனினும், மரபியல், சுற்றுச்சூழல், சமூக காரணிகள் பெரும் பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய் மது அருந்துவது, புகைப் பிடிப்பது, பிரசவ காலத்திற்கு முன் கூட்டியே பிறந்த குழந்தை, எடை குறைவாக பிறக்கும் குழந்தை, கர்ப்ப காலத்தின் போது கிருமித் தொற்றுகள், கர்ப்ப காலத்தின் போது மருத்துவர் பரிந்துரையின்றி நீண்ட நாட்களாக உட்கொள்ளும் வலி நிவாரண மருந்துகள், குழந்தைகள் அதிகம் செயற்கை உணவுச் சாயம் மிகுந்த உணவுகள் உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பது போன்ற காரணங்கள் ஏடிஎச்டி வருவதற்கான காரணங்களாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இவற்றோடு, அதிக நேரம் குழந்தைகளை டிவி, தொலைபேசியில் செலவிட வைப்பது, குழந்தைகளுடன் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி போன்றோர் அதிக நேரம் செலவழிக்காமல் இருப்பது போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், ஏடிஎச்டி தன்னிச்சையாகவும் ஏற்படும். அதாவது, ஆட்டிசம், டவுன்’ஸ் சிண்ட்ரோம், வளர்ச்சி தாமதம் போன்றவற்றாலும் இணைப்புற்று வரும் வாய்ப்பும் உள்ளது.
கண்டறியும் வழியும், செய்யவேண்டியதும்..?
1. குழந்தையின் நடவடிக்கைகளை கவனிப்பது.
2. பெற்றோர், குழந்தை காப்பாளர், தாத்தா, பாட்டியிடம் அக்குழந்தையின் நடவடிக்கைகள், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொள்வது.
3. ஸ்கேன், x- ray, ரத்த பரிசோதனை போன்றவை தேவையில்லை எனினும், வேறு ஏதேனும் நோய்கள் (வளர்ச்சித் தாமதம், மூளை சிதைவு, வலிப்பு, மரபியல் சார்ந்த நோய்கள்) ஏடிஎச்டியோடு இணைப்புற்று இருந்தால் மேல் சொன்ன பரிசோதனைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.
4. ஏடிஎச்டி யை முற்றிலும் குணப்படுத்த முடியும். எனினும் அக்கோளாறை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையேல் பேசுவதில் தாமதம், அறிவாற்றல் குறைவாக இருப்பது, சமூக வாழ்வு பழகாமல் இருப்பது, படிப்பில் கவனக் குறைபாடு போன்ற பக்கவிளைவுகளுக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம்.
சிகிச்சை முறைகள்..?
பிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவத்தில் இக்குறைபாடிற்கான தீர்வைக் காணலாம். உடம்பில் எக்கச்சக்க ஆற்றல் இருப்பதால்தான் அவர்கள் மிகையாக செயல்படுகிறார்கள். இப்படி பயன் இல்லாத வகையில் அதீத ஆற்றலோடு செயல்படுவதால் கவனச் சிதறல் ஏற்படுகிறது. ஆகையால் இந்த மிகை ஆற்றலை குறைக்க, குழந்தைகளுக்கான (விளையாட்டு) முறையில் இயன்முறை பயிற்சி வழங்கப்படும். இது விளையாட்டு முறையில் இருப்பதால் குழந்தைகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இம்மருத்துவம் குறைந்தது 30 – 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் இருக்க வேண்டும்.
முழுமையாக குழந்தையை சராசரி குழந்தையாக மாற்ற
1 1/2 முதல் 2 வருடங்கள் வரைக் கூட நீடிக்கலாம். உணவுக் கட்டுப்பாடு மிக அவசியமான ஒன்று. இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இனிப்பு மேலும் செயலாற்றலை அதிகப்படுத்தும். வெளி உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பெற்றோர் கவனத்திற்கு..?
1. ‘Screen time’ என்று சொல்லப்படும் டிவி, தொலைபேசி பார்ப்பது, ரைம்ஸ் கேட்பது ஆகியவற்றை தடுத்து, ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் நீளாமல் தடுத்தல் அவசியம்.
2. குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். பெற்றோர் தவிர்த்து வீட்டில் உள்ள மற்ற நபர்களும் (தாத்தா, பாட்டி, உடன் பிறப்புகள்) குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும்.
3. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு வாரத்திற்கு 4 – 5 முறை அழைத்து செல்ல வேண்டும்.
4. உணவில் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அதிலும், பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
5. வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு விளையாட அனுமதிக்க வேண்டும்.
6. அடிக்கடி நண்பர்கள், சுற்றத்தார், உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
7. அதீத ஆற்றலை குறைக்க நீச்சல் பயிற்சி, கடற்கரை மணலில் விளையாடுவது, skating போன்ற விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
ஏடிஎச்டி-யை தடுக்க முடியுமா..?
குழந்தைகளின் மூளை முழுமையாக வளர்ச்சி பெற குறைந்தது 5 வயதாகும். அதுவரை பெற்றோர்கள் 90% நேரம் குழந்தைகளுடன் செலவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியே அழைத்துச் செல்வது, வீட்டு வேலைகளில் அவர்களையும் ஈடுபடுத்துவது போன்றவற்றை செய்யவேண்டும். இதனால் மரபியல் அல்லாமல் வரும் ஏடிஎச்டி-யை தடுக்க முடியும். அத்தோடு அதன் தீவிரத்தையும் தடுக்க முடியும். எனவே, கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு திரியும் குழந்தைகளைக் கண்டு இனி யாரும் அஞ்ச வேண்டியதில்லை. மாறாக அவர்களுக்குத் தேவையான தக்க சிகிச்சையும், வாழ்முறை மாற்றமும் அளித்தால் போதும் .மிக எளிதில் குழந்தைகளை ஏடிஎச்டியின் பிடியிலிருந்து மீட்கலாம்.