பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து ஞாயிறன்று தீர்மானிப்போம்!!
2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இதன் வாக்கெடுப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சி கூடவுள்ளதென்றும் இதன்போது வரவு –செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.
அரசாங்கத்துடன் எமக்கு எவ்விதமான உறவுகளும் எமக்கோ எமது கட்சிக்கோ இல்லை. ஆனால் தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இந்த நாட்டுக்கு சேவை செய்யம் வேளை தானும் தனது கட்சியும் அவருடன் இணைந்து செயற்பட்டோம். சகல அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எமது ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால் இந்த 2 வருடங்களில் அவருக்கு இருந்த அதிகாரம் 20ஆவது திருத்ததால் குறைக்கப்பட்டுள்ளது.
9 வருடங்கள் அவரது தலைமையிலான ஆட்சி காலத்தில், நாட்டுக்கு செய்த சேவை, மக்களுக்கு
செய்த உதவி தற்பாது இரண்டு வருடங்களாக இல்லாமல் போயுள்ளமையை அனைவரும் அறிவர் என்றார்.
விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ளவர்கள் வீதிக்கு வந்து பேசாமல்
அமைச்சரவைக்குள் பேசி மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதற்கு தான் மக்கள்
வாக்களித்துள்ளனர். அதைவிடுத்து ஊடகங்கள் முன்பாக கூறுவதில் எவ்வித பலனுமில்லை.
அரசாங்கம் தவறு செய்தால், இது தவறென சுட்டிக்காட்டும் தைரியம் இருக்க வேண்டும் என்றார். இதேவேளை,பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் முன்வைக்கப்பட்ட போது, தான் சிறையில் இருந்ததாகவும் கட்சி தலைவர் என்ற ரீதியில் நாம் அதற்கு எதிராகவே வாக்களிக்க தீர்மானித்தோம்.
ஆனால், எமது கட்சி உறுப்பினர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பாகும். அது கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.