வியாபாரியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்…!!
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார் இருப்பதாக சேகர் கூறவும், அதற்கு அந்த வாலிபர் காரை எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தளி பகுதிக்கு வர சொன்னார்.
அங்கு சென்ற சேகரை அங்கு தயாராக நின்றிருந்த 4 வாலிபர்கள் தாக்கி, மிரட்டி அவரது கார் மற்றும் அணிந் திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் ஆகியோரை பொள்ளாச்சியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. வியாபாரியை தாக்கி காரை பறித்து சென்ற சம்பவம் குறித்து தளி போலீசார் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.
அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் காரில் தளியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினர்.
பொள்ளாச்சி போலீசார் திப்பம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குறிப்பிட்ட அந்த கார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை மறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் நிற்பதை பார்த்த கொள்ளையர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி சென்றனர்.
உடனடியாக போலீசார் வாகனத்தில் கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சினிமா காட்சியில் வருவது போல் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அவர்களை விரட்டி சென்று சின்ன பாளையம் பகுதியில் காரை மடக்கினர்.
போலீசார் மறித்ததும் அதிர்ச்சியான கொள்ளையர்கள் காரை திறந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றி வளைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.