70 அடியை நெருங்கிய நீர்மட்டம்- வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு…!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி 69 அடியை எட்டியதுடன் அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 13-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உயர்ந்த நிலையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையினால் முல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதே போல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அந்த நீரும் வைகை அணைக்கு வந்து சேர்ந்தது.
இதனால் அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3294 கன அடி நீர் வருகிறது. நேற்று 2600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 4420 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5681 மில்லியன் கன அடியாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேறுமாறு இன்று காலை முதல் அதிகாரிகள் எச்சரிக்கை அளித்து வருகின்றனர். மேலும் திடீரென வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தங்க வைக்கவும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதனிடையே சண்முகாநதி அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த நீர் தேக்க திட்டத்தின் கீழ் உள்ள 1640 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியாறு 15.6, தேக்கடி 19.6, கூடலூர் 71.4, சண்முகாநதி அணை 51.6, உத்தமபாளையம் 52.7, வீரபாண்டி 68, வைகை அணை 7.6, மஞ்சளாறு 78, சோத்துப்பாறை 35, கொடைக்கானல் 31.6, ஆண்டிபட்டி 12.2, அரண்மனைபுதூர் 60.4, போடிநாயக்கனூர் 37.2, பெரியகுளம் 29 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.