பேடிஎம் நிறுவன பங்குகள் சரிவு: கண்ணீர் விட்டு அழுத நிறுவனர்…!!
ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.இந்நிறுவனத்தை தொடங்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா தனது நிறுவன பங்குகள் சரிவை கண்டதால் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்குகளை வெளியிட்டது.
பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது.இன்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன.
பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.
ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை பங்குகள் சரிந்தன. இதனால் பேடிஎம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டார்.அப்போது பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவை கண்டதால் அவர் கண்ணீர் விட்டார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டார்.