உத்தரபிரதேச ஆற்றங்கரையில் 5 ஆயிரம் பெண்களுடன் பிரியங்கா கலந்துரையாடல்…!!
பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டுள்ளார்.
பெண்கள் ஓட்டுகளை கவருவதற்காக இலவச ஸ்மார்ட்போன், ஸ்கூட்டி, பஸ் பயணம் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளார். 100 நாள் பிரசார திட்டத்தையும் வகுத்துள்ளார்.
சித்ரகூட் நகரில் மந்தாகினி ஆற்றங்கரையில் சுமார் 5 ஆயிரம் ெபண்களுடன் பிரியங்கா உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பங்கேற்க வந்த பிரியங்கா, அங்குள்ள சிவன் கோவிலில் வழிபட்டார்.
ஆற்றங்கரையில் அவர் அமர ஒரு படகு மீது மேைட அமைக்கப்பட்டு இருந்தது. அதை தவிர்த்து விட்டு, பெண்களுடன் தரையில் அமர்ந்து உரையாடினார். அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், வக்கீல்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் என பலதரப்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
பிரியங்காவின் 100 நாள் பிரசாரத்தின் தொடக்கமாகவும் இது அமைந்தது. அவர்களிடையே பிரியங்கா ேபசியதாவது:-
உத்தரபிரதேச தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத டிக்ெகட் கொடுப்பது வெறும் தொடக்கம்தான். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத டிக்கெட் கொடுப்பதை நான் விரும்புகிறேன்.
பெண்கள் தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டும். திரவுபதியை காப்பாற்ற கிருஷ்ணர் வர மாட்டார். அவர்களே ஆயுதம் ஏந்த வேண்டும். துச்சாதனன் சபையில் எந்த வகையான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?
விவசாயிகள் மீது கார் ஏற்றிய மத்திய மந்திரி மகனுக்கு அரசு உதவி செய்கிறது. ஆனால், கோரிக்கையை எழுப்பிய சுகாதார பெண் பணியாளர்களை அடித்து விரட்டுகிறது. இத்தகையவர்களிடம் நீங்கள் உரிமையை பெற முடியாது. அதற்கு போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.