ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என இவ்வழக்கை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.
அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கு விஷேட உத்தரவினைப் பிறப்பித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின் போது அறிவித்ததர்கு அமைய, நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.
பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவர்கலின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கபப்டுகிறது.´ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.