பாதுகாப்பு சாதனங்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் – ராஜ்நாத் சிங் பெருமிதம்…!!
ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களை முப்படைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முப்படையின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டரை பிரதமர் மோடி இந்திய விமான படைக்கு முறைப்படி வழங்கினார். இதேபோல், இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களுக்கு தேவையான நவீன மின்னணு போர் கருவிகளையும், இந்திய ராணுவத்துக்கு தேவையான, உள்நாட்டிலேயே தயாரான ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு சாதனங்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நாள் விரைவில் வரும் என உறுதி கூற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.