விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது 2-வது தடவை…!!
விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.
வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.
அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பல மாத எதிர்ப்புக்கு பிறகு, பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ வானொலி உரையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிடுவதாக அறிவித்தார். ஏற்கனவே அமலில் இருந்த அவசர சட்டம் காலாவதி ஆன பிறகு அதை மீண்டும் பிறப்பிக்க மாட்டோம் என்று அறிவித்து, எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிக்கலாம்…‘வீடியோ கேம்’ விளையாட தடை: 213 பவுன் நகை, ரூ.33 லட்சத்துடன் வெளிநாடு செல்ல முயன்ற மாணவன்