ராஜஸ்தான் அமைச்சரவை ராஜினாமா – நாளை அமைச்சரவை மாற்றம்…!!
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என விமர்சிக்கும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
எனவே, நவம்பர் 11-ம் தேதி முதல் மந்திரி அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.