ஆந்திரா கனமழை – பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு…!!
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், மழை சற்று திசைமாறி ஆந்திரா நோக்கி சென்றதால் சென்னை தப்பியது. ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த மழைக்கு ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார். அப்போது, ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உறுதியளித்தார்.
இந்நிலையில், ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேரை காணவில்லை. இதுவரை 64 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.