Phototherapy!! (மருத்துவம்)
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள் காமாலை, சரும நோய்கள், புற்றுநோய், புற்றுநோய்க்கு முந்தைய நிலை, மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோ தெரபி என்பது என்னவென்று கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்…
‘‘பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் பிறந்த 5 நாளில் இயற்கையாகவே மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். அது இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதை Physiological jaundice என்று சொல்கிறோம். ஒரு வேளை இரண்டு வாரங்கள் ஆகியும் அது சரியாகவில்லை என்றால், வேறு என்ன மாதிரியான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுவாக குழந்தையின் மலம் வெள்ளை நிறத்தில் இருந்தால் அது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் பிறவியிலேயே ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும். ஆனால், சில சமயத்தில் குழந்தையின் மலம் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், கண் மஞ்சளாக இருப்பதோடு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகிறபோது அதற்கு ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
பிறந்த குழந்தைகளுக்கு சில சமயம் கல்லீரல் அல்லது பித்தக்குழாய் சரியாக உருவாகாமல் போகக்கூடும். இதற்கெல்லாம் இந்த ஒளிக்கதிர் சிகிச்சை பலனளிக்காது. அதற்குரிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். எனவே, Physiological jaundice பிரச்னைக்கு மட்டும் ஒளிக்கதிர் சிகிச்சையானது நல்ல நிவாரணம் அளிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த Physiological jaundice பிரச்னை முன்கூட்டியே பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு (Preterm babies) ஏற்படுகிறது. அதாவது 38 வாரத்தில் பிறக்க வேண்டிய குழந்தை 36 அல்லது 34 வாரங்களில் முன்கூட்டியே பிறக்கிறபோது, அதன் எடையும் குறைவாக இருக்கும். இப்படி முன்கூட்டியே பிறக்கிற குழந்தைகளின் எடை பொதுவாக 2 கிலோ அல்லது அதற்கும் குறைவாக 1.900, 1.800 கிலோகிராம் என்றவாறு
இருக்கலாம்.
இப்படி பிறக்கும் குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு செல்ல இயலாது. எடை குறைவாக இருப்பதால் அந்தக் குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் பிரச்னை இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவமனையில் அந்தக் குழந்தைகளை புற ஊதாக்கதிர் உள்ள இன்குபேட்டர் உள்ளே படுக்க வைப்பார்கள். இதன் மூலம் அந்தக் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதோடு, புற ஊதாக்கதிர்களின் உதவியோடு மஞ்சள் காமாலையின் செறிவினையும் குறைக்க முடியும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த ஒளிக்திர் சிகிச்சையை தேவைக்கேற்ப சரியான அளவில், குறிப்பிட்ட நேரம் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை அதிக நேரம் கொடுத்தால் குழந்தையின் உடல் அதிக சூடாகி, நீர்ச்சத்து குறைய காரணமாகிவிடும். இந்த சிகிச்சை அளிக்கிறபோது குழந்தைகளின் கண்களை நல்ல காட்டன் துணியால் மூடிவிடுவார்கள்.
அப்போது கண்களை திறந்து வைத்திருந்தால், அவை அதிகமாக உலர்ந்துவிடும் என்பதே அதற்கு காரணம். பச்சிளம் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் சரியாகாத Physiological jaundice பிரச்னைக்கு, மருத்துவர் ஆலோசனைப்படி இந்த ஒளிக்கதிர் சிகிச்சையை தொடர்ந்து கொடுப்பதன் மூலம் 3 அல்லது 4 வாரங்களில் நோயின் தீவிரத்தன்மை குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சாதாரணமாக குழந்தைகளை காலை நேர சூரிய ஒளியில் காட்டினாலே போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் குழந்தைகளின் உடலில் படுகிறபோதோ அல்லது மருத்துவமனையில் ஊதா நிறத்தில் வெளிப்படுகிற புற ஊதாக்கதிர்கள் உடலில் படுகிறபோதோ அல்லது வீட்டிலுள்ள டியூப்லைட்டின் வெளிச்சம் படுவதுபோல் வைக்கிறபோதுகூட பச்சிளம் குழந்தைகளுக்கு வருகிற மஞ்சள் காமாலை நோய்க்கு நிவாரணம் கிடைக்கிறது.
குழந்தையை வெளிச்சத்தில் காட்டுங்கள் என்று பெரியவர்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைத்தான் மருத்துவத்தில் புற ஊதா ஒளிக்கதிர் சிகிச்சையாக கொடுக்கிறார்கள். இங்கு நோயின் தன்மை மற்றும் குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்ப தகுந்த அளவில் அக்கதிர்களை ஒழுங்குபடுத்தி கொடுத்து நோயை குணமாக்குகிறார்கள்.
சரும நோய்கள் உள்ளவர்களுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதில் சில மாற்றங்கள் இருக்கிறது. இதில் சில மருந்துகளை கொடுத்து அதன்பிறகு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை மட்டும் தனியாக கொடுப்பதில்லை. சருமத்தில் பிரச்னை இருப்பவர்கள் சருமநல மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த ஒளிக்கதிர் சிகிச்சையை எடுத்துக்கொள்ளக் கூடாது. சில சமயங்களில் புற ஊதாக்கதிர்களினால் சருமத்தில் செதில்கள் போன்று உருவாவது, இதன் அதிக வெப்பத்தால் சருமம் கருப்பாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளைத் தடுத்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீன் களிம்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
சில ஒளிக்கதிர்களை நாமாகவே செயற்கையாக உருவாக்கலாம். அதற்கு உதாரணமாக X-Rays என்பதை சொல்லலாம். இதுபோன்று ஒளிக்கதிர்களை மருத்துவமனையில் செயற்கையாக உருவாக்கி மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக உடலில் படுவதால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் உண்டாவதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி நாம் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், அதில் VIBGYOR என்று சொல்லக்கூடிய வானவில்லில் தோன்றும் ஏழு நிற ஒளிக்கதிர்களும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக புற ஊதாக்கதிர்கள், அகச்சிவப்பு கதிர்கள் போன்றவற்றை நாம் சொல்லலாம். சூரிய ஒளியிலுள்ள ஒவ்வொரு நிற ஒளிக்கதிரும் ஒவ்வொரு அலை நீளம் மற்றும் கதிர்வீச்சுத் தன்மையை உடையது.
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்களில் UVA, UVB, UVC என்று மூன்று வகை உள்ளது. இதில் UVA வகையானது 320 முதல் 400 நானோமீட்டர் அலைநீளத்தையும், UVB வகையானது 290 முதல் 320 நானோமீட்டர் அலைநீளத்தையும் உடையது. UVC வகை ஒளிக்கதிரானது வளிமண்டல ஓசோன் அடுக்கால் உறிஞ்சப்படுவதால் பூமியை சென்றடைவதில்லை.
வளிமண்டலம் வழியே ஊடுருவி பூமியின் மேற்பரப்பை அடையும் 95 சதவிகித புறஊதா ஒளிக்கதிர்கள் நீண்ட அலைநீளத்தைப் பெற்றுள்ள UVA வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது.
UVA மற்றும் UVB வகை ஒளிக்கதிர்கள் சருமத்திற்கு மோசமானவை என்றாலும் UVA வகை ஒளிக்கதிர்களே அதிக அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த இரண்டு வகை ஒளிக்கதிர்களும் வளிமண்டலம் வழியே ஊடுருவி, முன்கூட்டியே தோல் வயதானது போன்று தோன்றுவது, கண்புரை உள்ளிட்ட கண் பாதிப்புகள் மற்றும் தோல் சார்ந்த புற்றுநோய்கள் ஏற்படுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.’’