மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கோவை அரசு கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்டு…!!
கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த கல்லூரியில் பி.பி.ஏ. துறைத்தலைவர், பேராசிரியராக வேலை பார்க்கும் விளாங்குறிச்சி மதிநகரை சேர்ந்த ரகுநாதன்(வயது42) என்பவர் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச தகவல் அனுப்புதல், இரவு நேரங்களில் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்புவது, தனியாக தன்னை வந்து சந்திக்க சொல்வது,
தன்னுடன் காரில் பயணம் செய்ய வரும்படி அழைப்பது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக மாணவர்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவ, மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தினருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நுழைவு வாயில் முன்பு 200-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 20 வயது மாணவி ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரிலும், மாணவர்கள் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் கல்லூரிக்கு சென்று நேரடியாக விசாரித்தனர். அங்குள்ள மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் யு.ஜி.சி. வழிகாட்டுதலின் படி பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்வதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவினர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பேராசிரியர் ரகுநாதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கினர். அதன்படி ரகுநாதனை, கல்லுரி முதல்வர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.