பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்த மாத இறுதியில் அறிவிப்பு – மத்திய அரசின் ஆலோசனை குழு தகவல்…!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல நோயாளிகள் உயிரிழந்தனர்.
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதன் தொற்று பல வகையிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் 2 தவணைகளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவின் 3-வது அலை டிசம்பர் மாதம் தாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்த கொள்கை குறித்து இந்த மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று என்.டி.ஜி.ஐ. அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவாகும். இதுகுறித்து என்.டி.ஜி.ஐ. உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
இந்தியாவில் தொற்று நோயின் அடிப்படையில் ஒரு விரிவான கொள்கை வெளிவர வாய்ப்பு உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி குறித்த கொள்கை அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும். அடுத்த 2 வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கொரோனா தடுப்பூசி
பூஸ்டர் தடுப்பூசி குறித்த கொள்கை தயார்நிலையில் இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்தி முடிப்பதில்தான் முக்கியத்துவம் அளிக்க முடியும்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் முதல் டோஸ் செலுத்தப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும். தற்போது 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் டோசும், 41 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் 2 டோசையும் செலுத்தி உள்ளனர்.
சமீபத்தில் நடந்த கூட் டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை கேட்டுள்ளனர். மராட்டிய சுகாதார அமைச்சர் இதை வலியுறுத்தியிருந்தார்.