அபிவிருத்திகள் தேர்தலை இலக்காக கொண்டவையல்ல !!
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசாங்க மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள், தேர்தலை இலக்காக கொண்டுள்ளதென சிலர் குற்றம் சுமத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நினைவூட்டினார்.
கண்டியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது,இரண்டு வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் எவ்வித சிக்கல்களும் இல்லையெனத் தெரிவித்த அவர், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றார்.
மேலும், கொரோனாத் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முடங்கியதால், சுற்றுலாத்துறையினர் நாட்டுக்கு வருகை தரவில்லை என்றும் இதனால் 4.2 டொலர் பில்லியன் வருமானத்தை இலங்கை இழந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
எனினும், கடந்த மாதங்களில் 19,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களின் வருமானமும் தொற்றால் இழக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.இதேவேளை, நலன்புரி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இடையில் ஒப்பீட்டு ரீதியிலான பட்ஜெட்டை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பொதுநலவாய நாடுகளிடம் இலங்கை நன்மதிப்பையும் பாராட்டையும்
பெற்றுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்து சமுத்திர வலயம் தொடர்பான சர்வதேச
சம்மேளனத்தில் உப- தலைவர் பதவியும் இலங்கைக்கு கிடைத்துள்ளது என்றார்.