அரசாங்கத்தின் கொள்கையை அரச ஊழியர்கள் விமர்சிக்கக் கூடாது!!
அரச மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்யவேண்டாமென்ற கட்டளை, அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் சமூக ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அரச ஊழியர்களே முன்னெடுத்துவருகின்றனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்தே, மேற்கண்டவாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த கட்டளையை மீறினால், ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகிறது.
பிரதேச செயலாளர்கள், அபிவிருந்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளிட்டவர்களே அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தினர் என்றும் அவ்வமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிறுவனங்களின் சட்டத்தின்படி, அரச ஊழியர்கள், அரசாங்கத்தை விமர்சனம் செய்யமுடியாது.
அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைளை விமர்சிக்கும் அரச ஊழியர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம சேவகர்களுக்கு எதிரான முறைப்பாடுகளே அதிகமாகுமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.