இங்கிலாந்து நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இங்கிலாந்தில் 40 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 6 ஆயிரத்து 34 ஆகும்.
தொற்றால் நேற்று ஒரு நாளில் 150 பேர் இறந்தனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,079 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறார்கள்.
இதுபற்றி அவசர காலத்துக்கான அறிவியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் எட்மண்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது, நிலைமை எவ்வளவு விரைவாக மோசமாகி விடும் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார். மேலும் அந்த நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பாதுகாப்பு முகமை கூறுகிறது.
இதற்கிடையே அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட 88 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 80 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு விட்டனர், 25 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.