மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்!!
மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்: வழக்கு புதன்கிழமை வரை ஒத்தி வைப்பு
மாவீரர் நாள் தடை உத்தரவுக் கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மன்றினால் எதிர்வரும் புதன் கிழமை வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (22.11) தெரிவிக்கையில்,
இறந்தவர்களை நினைவு கூர எனக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவு கட்டளையை மன்று மீளப்பெறவேண்டும் என கோரி சட்டத்தரணி யூஜின் ஆனந்தராஜ் தலைமையில் வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தேன். வவுனியா மன்றில் இருந்த பல சட்டத்தரணிகளும் தாமாக முன் வந்து குறித்த வழக்கில் ஆஜராகியிருந்தார்கள்.
தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் 106 இன் (1), (3), (6)பிரிவின் படி ஆர்ப்பாட்டத்தையும், மாவீரர் தினத்தையும் நடத்துவதை நிறுத்துவதற்கான கட்டளை என வழங்கப்பட்டிருந்தது. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிக்கையிலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், இலங்கை சோசலிச குடியரசினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்புக்கு உடந்தையளித்தல், அதனை பிரபல்யப்படுத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நினைவாக 21.11 – 27.11 வரை உறுப்பினர்கரைள இணைந்து மாவீரர் நாள் செய்யவுள்ளதாகவும், இது விரோதமான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டி பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மன்றிடம் இருந்து பொலிசாரினால் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்த கட்டளையின் படி நான் குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டு எமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இணைந்து இறந்த உறவுகளுக்கு நினைவு செலுத்த உரிமை இருக்கிறது. அது அடிப்படையான உரிமை என எனது சார்பில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். தமிழ் மொழியை கையாண்டு இந்த வழக்கை நடத்த தற்போது ஆளணி இல்லை எனவும் மாவீரர் தினத்திற்கு பின் நடத்த குறித்த வழக்கை நடத்த பொலிசார் அனுமதி கோரினர். எமது சட்டத்தரணிகள் அதனை கடுமையாக எதிர்த்தனர்.
மாவீரர் தினம் முடிந்த பின் தமது கட்சிக்காருக்கு அவர் கோரும் நிவாரணம் கிடைக்காமல் போய்விடும். எனவே இன்றைய தினமே கட்டளை வழங்குமாறு மன்றிடம் கோரினர்.
குறித்த நிகழ்வு தொடர்பில் கிடைத்த ஆதாரங்களை பொலிசார் சாட்சிப்படுத்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மன்று கட்டளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”