;
Athirady Tamil News

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை!!

0

இந்நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை விநியோகம், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அனைத்தும், சேதன விவசாயத்துக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இது விடயத்தில் விவசாயிகளுக்கான போதிய தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். அதேபோன்று, மேற்படி விடயங்களைச் செயற்படுத்தும் போது இடம்பெறக்கூடிய இரசாயனப் பசளை மாஃபியா தொடர்பிலும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்காகப் போராடி சரியானதை வெற்றிகொள்வதற்கு, அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

பெரும்போகச் செய்கை மற்றும் சேதனைப் பசளை விநியோகம் தொடர்பில், இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும், நெல் உட்பட ஏனைய பயிர்ச் செய்கைகள் தொடர்பான விவரங்களை, மாவட்ட ரீதியில் அதிகாரிகளிடம் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்துகொண்டார். நாட்டில் நிலவிய அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக, மரக்கறி உள்ளிட்ட பெரும்பாலான பயிர்களின் அறுவடைகள் குறைந்துள்ளமை தொடர்பில் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், சேதனப் பசளை விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பெரும்போகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இருப்பினும், மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து, பயிர்ச் செய்கை நிலங்களில் 70 சதவீதமானவற்றில் பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கும் பயிர்ச் செய்கைகளை அவர்கள் தாமதப்படுத்துவதற்கும் காரணம், அவர்களுக்கான போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்படாமையாகும் என்று, ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அவ்வாறு விவசாயிகளைத் தெளிவுபடுத்தாமை தொடர்பில், உரிய அதிகாரிகளுக்கு தனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, போராட்டங்களை முன்னெடுக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, பசுமை விவசாயக் கொள்கையில் இருந்துகொண்டு தீர்வுகளைக் காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்றும் குறிப்பிட்டார். மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழுவொன்றால் மாத்திரமே இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென்றும், ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ஆளுநர்களான மார்ஷல் ஒஃப் தி எயார்ஃபோஸ் ரொஷான் குணதிலக்க, அநுராதா யஹம்பத், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் விவசாயத்துறை அமைச்சு அதனோடு இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள், சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.